ராஜபாளையம்: பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பீதி
ராஜபாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்ற அன்பழகன் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தார். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் பீதியடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி அறிந்த கண்ணன் என்ற அன்பழகன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இவர் மீது ஏற்கனவே விலங்குகள் வேட்டையாடியது உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே வெடிகுண்டு வைத்திருந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேத்தூர் ஊரக காவல் துறையினர், தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததால்= அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.