கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்ய விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு

கூலி உயர்வை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்

Update: 2022-11-18 11:30 GMT

ராஜபாளையம் அருகே கூலி உயர்வு கோரி வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பகுதியில், மின் கட்டண உயர்வு, நூல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக, கூலி உயர்வு கேட்டு வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, சத்திரப்பட்டி வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சத்திரப்பட்டி வட்டாரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் மற்றும் மின் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், இங்கு தயாராகும் மருத்துவ பேண்டேஜ் துணி மற்றும் ஏற்றுமதிக்கான துணிகள் தயாரிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால், சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி உயர்வு கேட்டு ஏற்றுமதி மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. இது குறித்து, சத்திரப்பட்டியில், சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் பேசும்போது, 16 ஊடை கொண்ட 1 மீட்டர் துணிக்கு 166.5 பைசா கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு மீட்டருக்கு 10 பைசா உயர்த்தி, 176.5 பைசா வழங்க வேண்டும். கூலியை உயர்த்தி வழங்கா விட்டால், வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், 23ம் தேதி ராஜபாளையம் ஏற்றுமதி மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பு அலுவலம் முன்பும், 24ம் தேதி கிராம நிர்வாக அலுவலகம் முன்பும், 25ம் தேதி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

போராட்டம் குறித்து, சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் குருசாமி கூறும்போது: தற்போதைய மின்கட்டணம், உயர்வதற்கு முன்பாக, 5 தறிகள் கொண்ட விசைத்தறி கூடத்திற்கு 750 யூனிட் மானியம் கழித்தது போக, 4 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக வந்தது. ஆனால், தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்பு மின் கட்டணம் 8 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். எனவே, உடனடியாக கூலி விலை உயர்வை வழங்கிட வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News