பிளவக்கல் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. கடந்த சில நாட்களாக மலைப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது அணையின் நீர் மட்டம் 32 அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்தும் இருந்து வருகிறது. இதனால் இந்தப்பகுதி விவசாயிகள், பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தினமும் 150 கனஅடி தண்ணீர் வீதம் 3 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இதனால் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள சுமார் 800 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியை பெறும் என்று கூறினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனமுனி, மாவட்ட வேளாண் இயக்குனர் சங்கரநாராயணன், செயற்பொறியாளர் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் மலர்விழி, கிரண்பேடி, வத்திராயிருப்பு தாசில்தார் சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.