சிவகாசி அருகே புதிய தனியார் நூற்பாலை: அமைச்சர் திறப்பு
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 78 கோடி மதிப்பில் இந்த தனியார் நூற்பாலை தொடங்கப்பட்டது
சிவகாசி அருகே, தனியார் நூற்பாலையை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி - எம்.புதுப்பட்டி அருகேயுள்ள செவலூர் பகுதியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 78 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தனியார் நூற்பாலை அமைக்கப்பட்டது.
இந்த புதிய நூற்பாலையை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தங்கம்தென்னரசு பேசும்போது, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அங்கமான வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒற்றைச் சாளர வசதிகள் வழங்கிடும் முகமையாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிவகாசி அருகேயுள்ள செவலூரில், ஸ்ரீசர்வலோகா நூற்பாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 78 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூற்பாலையில் நேரிடையாக 400 பேருக்கும், மறைமுகமாக 500 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனால் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பயனடைவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் மேலும் பல புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நூற்பாலை உரிமையாளர் ராம்முருகேசன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மண்டல மேலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்து வந்த பாதை ...
2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்குப்பின் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடும், 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 20.7.2021 அன்று சென்னையில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி வாயிலாக 17,141 கோடி ரூபாய் முதலீடும், 55,054 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
22.9.2021 அன்று சென்னையில் ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி வாயிலாக 1880 கோடி ரூபாய் முதலீடும், 39,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 23.11.2021 அன்று கோயம்புத்தூரில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி வாயிலாக 35,208 கோடி ரூபாய் முதலீடும், 76,795 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
7.3.2022 அன்று தூத்துக்குடியில் "சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவின் போது" 4,488 கோடி ரூபாய் முதலீடும், 15,103 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இதுதவிர, 11.9.2021 மற்றும் 15.3.2022 அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் 3,558 கோடி ரூபாய் முதலீடும், 4,600 பேர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கும் வகையில் DP World மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.26.3.2022 மற்றும் 28.3.2022 ஆகிய நாட்களில் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
சீரான மற்றும் பரவலான தொழில் வளர்ச்சி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.