இராஜபாளையத்தில் கனமழை: சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதி
சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு. மகப்பேறு மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில், கடந்த 4 தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மழை பெய்ததால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ததால் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில் சாலையோரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கடும் அவதிப்பட்டனர். அதேபோல், பண்டிகை காலம் என்பதால் கடைகளுக்குச் சென்ற பொதுமக்களும் மழையில் அவதியுற்று நிலையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
மேலும், இராஜபாளையம் அரசு மகப்பேரு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்ததால், நோயாளிகள் அவதியுற்றனர். மேலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம், மகப்பேறு மருத்துவமனை முன்பு உள்ள கழிவுநீர் உடைகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையாகும். சாலையில், மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிப்பட்டனர்.