ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
ராஜபாளையம் அருகே விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மற்றும் பனை மரங்களை வேரோடு பிடுங்கி அட்டகாசம். தமிழக அரசு நஷ்டஈடு வழங்க கோரிக்கை:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில், யானை, புலி, மான், கரடி மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து அடிவாரப் பகுதியை நோக்கி இறங்கும் காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் நச்சாடை கோவில் கரை பகுதியில் இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தென்னந் தோப்புக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்தப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து இது போன்று யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதாகவும், புகார் கூறினாலும் இதனைப் பற்றி வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே வனத்துறையினர் உடனே நடவடிக்கை எடுத்து , யானைகள் விவசாய நிலத்துக்கு வராமல் அகழிகள் அமைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.