இராஜபாளையத்தில் கர்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைக்காப்பு
இராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 பேர் இருக்கக்கூடிய இடத்தில் 500 பேரை அமர வைத்ததால் சிரமம் ஏற்பட்டது;
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ரயில்வே பீடர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில், தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை சமூக நலத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், இராஜபாளையம் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். வளைகாப்பு நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நடைபெறும் என, அறிவித்து இராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கர்ப்பிணி பெண்கள் 400-க்கும் மேற்பட்டோரை காலை 8.30 மணிக்கே அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து சந்தனங்கள் பூசி அமர வைத்தனர். 300 பேர் இருக்கக் கூடிய இடத்தில் 500 பேரை அமர வைத்து மூச்சு திணறல் ஏற்படும் அளவிற்கு கூட்டத்தை கூட்டியதால் கர்ப்பிணிகள் சிரமப்பட நேரிட்டது.. மேலும், கர்ப்பிணிகளுடன் துணைக்கு வந்திருந்த உறவினர்கள், சமூக நலத்துறை அங்கன் வாடி பணியாளர் 400க்கும் மேற்பட்டோர் உள்பட மொத்தம் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு குடிநீர் வசதி கூட ஏற்பாடு செய்யாமல், இருந்ததால் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து அவதிக்குள்ளனர்கள் .இது போன்ற நிகழ்ச்சிகளை, குறிப்பிட்ட நேரத்தில் நடத்தினால் நன்றாக இருக்கும். கர்ப்பிணிகள் காத்திருப்பதால் உடல் ரீதியான பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.