மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸார் விசாரணை
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயற்சித்த பெண்ணைத்தடுத்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (22). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த ராஜபாண்டி (26) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜபாண்டி, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராஜபாண்டி தனது மனைவி புவனேஷ்வரியை, அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். மீண்டும் அவர் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து புவனேஷ்வரி சிவகாசி நகர் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். ஆனால் இவரின் புகார்கள் மீது காவல் நிலையங்களில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ராஜபாண்டி தனது மனைவியிடம் விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த புவனேஷ்வரி தனது குழந்தை, தனது தாயார் குருவம்மாளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆட்சியர் அலுவலகம் எதிரே புவனேஷ்வரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். தீக்குளிக்க முயன்ற புவனேஷ்வரி, அவரது குழந்தை மற்றும் தாயார் குருவம்மாளை சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.