சாத்தூர் அருகே மர்மமான முறையில் மாற்றுத்திறனாளி பெண் உயிரிழப்பு

சாத்தூர் அருகே மர்மமான முறையில் மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-20 11:09 GMT

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் ராஜபாண்டி (33). பல ஆண்டுகளுக்கு முன்பு, கோவை நூற்பு ஆலையில் வேலை பார்த்தபோது இயந்திரத்தில் இவரது கை சிக்கி துண்டானது.

இதில் மாற்றுத்திறனாளியான இவர் சிந்தப்பள்ளிக்கு வந்து, அந்தப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த விஜய் என்பவருடன், ராஜபாண்டிக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் விஜய் உயிரிழந்தார். மகள்களுடன் வசித்து வந்த ராஜபாண்டி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை முருகேசன் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சிந்தப்பள்ளி ஊருக்கு வெளியே உள்ள உப்போடை பகுதியில், ராஜபாண்டி இறந்து கிடப்பதாக சாத்தூர் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மர்மமான முறையில் இறந்து கிடந்த அவரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்ற மாற்றுத்திறனாளி பெண், மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News