வாகனத்திருட்டு: மூவர் கைது

அருப்புக்கோட்டையில் இரு சக்கர வாகனங்களை திருடி வெளி மாவட்டங்களில் விற்று வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-04-29 05:35 GMT

அருப்புக்கோட்டையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அடுத்தடுத்து ஏராளமான புகார்கள் வந்தன. அதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் நகரில் உள்ள சில இருசக்கரவாகன பழுது நீக்கும் கடைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பெரிய புளியம்பட்டி பரசுராம்புரம் தெருவை சேர்ந்த செல்வ முருகன் என்பவர், வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த தனது பல்சர் பைக்கை காணவில்லை என புகார் அளித்தார். அதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், புளியம்பட்டி காந்தி மைதானத்தில் உள்ள ஒரு இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் ஏராளமான வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் நிற்பதை கண்டு சந்தேகமடைந்தனர். அங்கு அடிக்கடி வரும் அஜித்குமார், சூர்யபிரகாஷ் மற்றும் சதிஸ்குமார் ஆகிய மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்,

விசாரணையில் பல்சர் பைக்கை திருடி சத்தியமங்கலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது, மேலும் சம்மந்தப்பட்ட இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடையின் உரிமையாளர் கரண் என்பவர் இந்த திருட்டுக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது. 

போலீசார் விசாரிப்பதை அறிந்த கடை உரிமையாளர் கரண்  தலைமறைவானார். தலைமறைவான உரிமையாளரை பிடித்தால் வேறு எங்கெல்லாம் இரு சக்கர வாகனங்களை திருடினார்கள் என்பது தெரியவரும் என்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Tags:    

Similar News