வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை
அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் வாகன ஓட்டுநர்களிடம் கையெடுத்து கும்பிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்;
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், காரியாபட்டி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்களிடம் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் ஆனந்தஜோதி தலைமையில், சார்பு ஆய்வாளர் திருமலைக்குமார், காவலர் சந்திரசேகர், ஆகியோர் கையெடுத்து வணங்கி கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முககவசம் அணிதல், தனி மனித இடைவெளி பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.