பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி மூலம் வெந்நீர் தயாரிப்பு கலன்: பள்ளி மாணவர் அசத்தல்
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பள்ளி மாணவர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி மூலம் வெந்நீர் தயாரிப்பு கலன் கண்டுபிடிப்பு.;
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பள்ளி மாணவர் எஸ்.ராஜசேகர் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி மூலம் வெந்நீர் தயாரிப்பு கலனை கண்டுபிடித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பள்ளி மாணவர், காலியான மறுசுழற்சி குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் மலிவு விலையில் வெந்நீர் தயாரிப்புக் கலனைக் கண்டறிந்து மத்திய அரசின் இன்ஸ்பையர் அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மூலம் ரூ10,000 பரிசுத்தொகையையும் பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்புப் படித்தவர் எஸ்.ராஜசேகர்.இவர் தனது பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ப.சரவணக்குமார் என்பவரின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கப்படுத்துதல் மூலம் 2020-21ம் கல்வியாண்டின்படி மத்திய அரசின் இன்ஸ்பையர் எனும் அறிவியல் ஆராய்ச்சிக்கழகம் நடத்தும் மாணவர்களுக்கான அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளில் கலந்து கொண்டார்.
இதில் விருதுநகர் மாவட்ட அளவிலான 47 பள்ளிகள் கலந்து கொண்ட போட்டியில் எஸ்.ராஜசேகரும் கலந்து கொண்டு முதலிடம் பெற்று, மத்திய அரசின் இன்ஸ்பையர் நிறுவனத்தின் ரூ10,000 பரிசையும் பெற்றுள்ளார். இவரது கண்டுபிடிப்பில் குறிப்பாக, பயன்படுத்தப்பட்ட குடிநீர் பாட்டில்களை லென்ஸ் போல பயன்படுத்தியும், எளிய விலை அலுமினியத் தாளை சூரிய கதிர் எதிரொளிப்புக்குப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள நீரை கொதி வெப்பநிலையான சுமார் 45 டிகிரி சூடுவரை உயர்த்துகிறார். இதன்மூலம் வழக்கமாக சந்தையில் உள்ள அதிக விலை சூரியசக்தி கொதிகலனுக்கு மாற்றாகவும், அதேவேளையில் காலியான குடிநீர் பாட்டில்களுக்கு மறுசுழற்சி பயன்பாட்டைக் கண்டுபிடித்து சுற்றுப்புற மாசினை குறைக்க வழி கண்டுபிடித்தமைக்காகவும் மத்திய அரசின் பாராட்டும் பரிசும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்போட்டியில் வென்றதன் மூலம், அம்மாணவர், அடுத்து நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளார். மாணவர் எஸ்.ராஜசேகரின் சிறப்பான செயல்பாடு மற்றும் கண்டுபிடிப்பை உறவின்முறை அபிவிருத்தி டிரஸ்டின் தலைவர் எம்.சுதாகர், பள்ளிச் செயலர் என்.வி.காசிமுருகன், தலைமை ஆசிரியர் ஏ.ஆனந்தராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பலரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.