அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கம்பிகள் சிக்கி விபத்து

அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் மின்சார கம்பிகள் சிக்கி விபத்து ஏற்பட்டது.

Update: 2022-01-08 04:37 GMT
ரயில் என்ஜினில் சிக்கிய மின் கம்பிகளை அகற்றும் ஊழியர்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொட்டியங்குளம் பகுதியில் இன்று காலை சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் மின்சார கம்பிகள் சிக்கி விபத்து ஏற்பட்டது. உடனடியாக ரயிலை நிறுத்தி ரயில்வே காவல் துறையினருக்கு ரயில் ஓட்டுநர் தகவல் தெரிவித்ததார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் ரயில்வே ஊழியர்கள் மூலம் எஞ்சினில் சிக்கிய மின்வயர்களை அப்புறப்படுத்தினர். இதனால் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை புறப்பட்டுச் சென்றது.

தற்போது விருதுநகர் மானாமதுரை இடையே மின் மயமாக்கல் பணி ரயில்வே மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி வரை தற்போது மின் கம்பிகள் மின் கம்பத்தில் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது நேற்று தொட்டியங்குளம் பகுதியில் மின்கம்பத்தில் வயர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மாலை நேரத்தில் பணியை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து மானாமதுரை விருதுநகர் வழியாக செங்கோட்டை சென்ற சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை அருகே தொட்டியங்குளம் பகுதியில் என்ஜினில் மின் கம்பிகள் சிக்கி விபத்து ஏற்பட்டது.

மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த கம்பிகள் என்ஜினில் சிக்கி விபத்து ஏற்பட்டதா அல்லது ரயில்வே மின்சார வயர்களை திருடர்கள் திருட முயன்று மீதி வயர்களை தண்டவாளத்தில் விட்டுச் சென்றுள்ளதால் தண்டவாளத்தில் கிடந்த ரயில்கள் என்ஜினில் சிக்கியதா என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ரயில்வே வயர்களை திருடர்கள் திருட முயன்று கம்பிகளை அறுக்க முடியாததால் ரயில்வே தண்டவாளத்தில் விட்டு சென்றுள்ளதாகவும், தண்டவாளத்தில் கிடந்த மின்கம்பிகள் அவ்வழியே வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விபத்து குறித்து சம்பவ இடத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News