தேர்தல் திருவிழாவுக்கு பத்திரிகை : விருதுநகரில் கலெக்டர் விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் கண்ணன் திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் விழா அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், அருப்புக்கோட்டையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், புலியாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக்கலைகள் நடைபெற்றன.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிவன் கோவில் அருகே துவங்கிய பேரணியில் பங்கேற்ற கலெக்டர் பஜார், அகமுடையார் மஹால், எம்எஸ் கார்னர், பந்தல்குடி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மாட்டுவண்டியில் பாரத தாயின் வேடமணிந்த சிறுமியும் கட்டை காலுடன் நடந்து வந்த சிறுவர்களும் கையில் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
வாக்காளர்களுக்கு பழங்கள் இனிப்புகளை தட்டில் வைத்து அதனுடன் வாக்களிக்கும் விழா அழைப்பிதழை வைத்து திருமணத்திற்கு வழங்குவது போல வழங்கி, வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற, விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகத்தில் முடிந்தது. இந்தப் பேரணியில் வருவாய் துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.