இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய பேருந்து நிலையம். பயணிகள் அவதி
திருச்சியில் இரவு ஊரடங்கால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க நேற்று முதல் இரவு ஊரடங்கை அறிவித்தது.அந்தவகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள், ஆட்டோக்கள், கார்கள் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் மதியம் 3 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதே போன்று பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு 9 மணி அளவில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
மாநகரப் பேருந்துகள் சரியாக இரவு 9 .45 க்கு நிறுத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் வந்த பயணிகள் தாங்கள் பயணித்த பயண சீட்டை காண்பித்து ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள் மாற்று பேருந்து கிடைக்காமல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலேயே அதிகாலை வரை தங்க வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டது.
திருச்சி மாநகர காவல்துறை உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.