கூட்டணி கொள்கைகளுக்கு மதிப்பளிப்போம் : கே.என்.நேரு
ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட்டணி கொள்கைகளுக்கு மதிப்பளிப்போம் என்று கே.என்.நேரு பேசினார்.;
ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டணி கட்சிகளின் கொள்கைகளுக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என்று கே.என்.நேரு பேசினார்.
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் தி.மு.க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு பேசும்போது,
கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வெற்றி பெற்றோம். அதற்கு கூட்டணி கட்சியினர் அனைவரின் உழைப்பும் தான் காரணம். அந்த வெற்றிக்கு பிறகே முதன்மை செயலாளர் என்கிற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் அப்போது எந்த பொறுப்புக்கு நான் வந்தாலும் சாதாரண தொணடனாகத்தான் இருப்பேன். மக்களுக்கு என்ன தேவைகளை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன்.
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வருவோம்,உய்யக்கொண்டான் வாய்க்காலை முழுமையாக சீர் செய்வோம்,மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும்,அனைத்து மக்களுக்கும் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.