விமானத்தில் வந்த கொரோனா தொற்று வாலிபர். 179 பயணிகள் தனிமை
கோலாலம்பூரில்இருந்து திருச்சிக்கு கொரோனா நோயாளியை விமானத்தில் அழைத்து வந்ததால், உடன் பயணம் செய்த 179 பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் வந்த அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டனர்.;
திருச்சி விமான நிலையத்துக்கு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய், சார்ஜா, ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்தும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமானால் அந்த பயணி கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து இருக்கவேண்டும்.
அத்துடன், பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே விமானத்தில் வெளி நாட்டுக்கோ அல்லது இந்தியாவுக்கோ பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஆனால் சமீபகாலமாக விமான நிறுவனங்கள் இந்த உத்தரவை கடைப்பிடிக்காமல் அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து "கொரோனா உள்ளது" என்ற சான்றிதழுடன் உள்ள பயணிகளை இந்தியாவுக்கு அழைத்து வருகிறார்கள்.
இதனால், கொரோனா நோயாளியுடன் பயணிக்கும் பயணிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும், விமான நிலைய ஊழியர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இதுபோல் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 3 கொரோனா நோயாளிகளை விமான நிலையத்தில் கண்டறிந்து, அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறையினர் அனுமதித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை 8.05 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 180 பயணிகள் திருச்சிக்கு வந்தனர்.
அவர்களை திருச்சி விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த போது, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் "கொரோனா உள்ளது" என்ற சான்றிதழுடன் விமானத்தில் வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பயணியை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், அந்த வாலிபருடன் விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்பு உள்ளதால், அவர்கள் அனைவரையும் தனிமை படுத்திக்கொள்ள மருத்துவக்குழுவினர் அறிவுரை வழங்கினர்.