ஆன்லைன் சூதாட்டத்தில் லட்ச ரூபாய் கடன். திருச்சி வாலிபர் தற்கொலை

திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்ச ரூபாய் கடனாளியான வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-22 07:06 GMT

திருச்சி பெரியமிளகுபாறை சேர்ந்த வாலிபர் ராம் (வயது 30). இவர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பேட்டரி கடையில் பணிபுரிந்து வந்தார்.இவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் 50,000 ரூபாயை இழந்துள்ளார்.

பின்னர் கடனில் சிக்கித் தவித்த அவருக்கு அவரது தாய் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து அவரது கடனை அடைத்து உள்ளார். இதனை தொடர்ந்து ரம்மி விளையாடிய ராம் மீண்டும் பணத்தை இழந்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட ராமின் நண்பர்கள் அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து ரம்மி விளையாட்டை தொடர்ந்த ராம் ஒரு லட்ச ரூபாயை இழந்து கடனில் சிக்கி உள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான ராம் பணிக்கு சென்று விட்டு உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு வந்த அவர் கதவை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

வீட்டில் வந்து அவரது சகோதரர் பார்த்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து நீதிமன்ற அமர்வு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News