திருச்சியில் வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சியில் வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு இன்று காலை ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் தனிப்படை போலீசாரும், ஹைவே பெட்ரோல் 1 போலீசாரும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஒரு லோடு வேன் வந்தது. அந்த வேனை மடக்கி பிடித்த போலீசார் அதைத் திறந்து பார்த்தபோது அதனுள் 25 மூட்டை முட்டைகோஸ், மற்றும் வெள்ளரி பழம் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை கோட்டை போலீஸ் நிலையம் கொண்டு வந்து மூட்டைகளைக் கீழே இறக்கியபோது, அதன் நடுவே ஒரு டன் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உடனடியாக கோட்டை போலீஸ் நிலையம் வந்து அவைகளை பார்வையிட்டு, இந்த பொருட்கள் எங்கிருந்து வந்ததோ அங்கே திரும்பவும் சாதாரண உடையில் போலீசாரை அனுப்பி தகவல் சேகரிக்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த வாகனத்தில் வந்த மைசூரை சேர்ந்த மனோஜ் (வயது 26), சோமு சேகர் (வயது 22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புககையிலை பொருட்கள் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இறக்கி அங்கிருந்து தஞ்சாவூர் ரோடு, அரியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சப்ளை செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு டன் அளவில் கைப்பற்றப்பட்ட இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.