குறைந்தளவு உரம் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்: கலெக்டர்
உரங்களை குறைந்த அளவு பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என்று, திருச்சி கலெக்டர் சிவராசு அறிவுறுத்தி இருக்கிறார்.;
திருச்சி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 86,250 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. மேலும் சிறு தானியங்கள் 1,10,000 ஏக்கரும், பருத்தி 24,915 ஏக்கரும், கரும்பு 3,950 ஏக்கரும், எண்ணெய்வித்து பயிர்கள் 20,112 ஏக்கரும், தோட்டக்கலைப்பயிர்கள் 62,500 ஏக்கரும் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பயிர்களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடக்கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பயிர்களுக்கு உரங்களின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு 620 டன் யூரியா ரெயில் மூலம் வந்துள்ளது. இவை, சம்பந்தப்பட்ட தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது.
தற்போது நிலவிவரும் சீதோஷ்ண நிலை காரணமாக, தழைச்சத்து உரத்தினை வேளாண்மைத்துறை பரிந்துரைக்கப்படும் அளவுகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் உரங்களை குறைந்த அளவு மற்றும் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.