திருச்சியில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் அபராதம் வசூல்
திருச்சியில் ஊரடங்கை மீறியவர்கள்-முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொது மக்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்பு பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து, முககவசம் அணிந்து இருக்கிறார்களா? என்று உறுதி செய்யப்படுகிறது. மேலும் உரிய காரணமின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராத தொகை வசூல் செய்யப்பட்டது.
அந்த வகையில் கடந்த 6-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து முககவசம் அணியாமல் வந்த 9,734 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.19 லட்சத்து 46 ஆயிரத்து 800 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.21 லட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.