நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மீறிய ரவுடிக்கு 334 நாட்கள் சிறை
திருச்சியில் நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மீறிய ரவுடிக்கு 334 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் தொடர்ந்து வழிப்பறி திருட்டு உள்பட செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை கோட்டை போலீசார் கைது செய்து நிர்வாக செயல் துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தினர். நிர்வாக செயல்துறை நடுவர் முன்பாக மாரிமுத்து ஒரு வருட காலத்திற்கு எந்தவித தவறும் செய்ய மாட்டேன் என உறுதிமொழி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கோட்டைப் பகுதியில் பொதுமக்களுக்கு பங்கம் ஏற்படும் வகையில் ஆபாசமாக பேசி ரவுடித்தனம் செய்தார். இதனையொட்டி கோட்டை போலீசார் மீண்டும் அவரை கைது செய்து நிர்வாக செயல்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தினர் .இதனைத் தொடர்ந்து நிர்வாக செயல்துறை நடுவர் மாரிமுத்துவை 334 நாட்கள் எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் மாரிமுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சியில் ரவுடித்தனம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.