திருச்சியில் சினிமா பாணியில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த போலீசார்
திருச்சியில் சினிமா பாணியில் விரட்டிச்சென்று கொள்ளையனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
சென்னை முடிச்சூர் பீர்கங்கரணை பகுதியில் ஒரு வீட்டில் ரூ.65 ஆயிரம் பணம் மற்றும் 50 கிராம் நகை உள்ளிட்ட வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வாலிபர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த காரையும் திருடிக்கொண்டு திருச்சி நோக்கி தப்பி வந்துள்ளான்.
இதனை அறிந்த சென்னை போலீசார் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் போலீசாரை தொடர்பு கொண்டு அந்த கார் எண்ணை கூறி அந்த காரை நிறுத்தி வாலிபரை பிடிக்குமாறு கூறினர். ஆனால் போலீசாரால் பிடிக்க முடியவில்லை. இறுதியில் சென்னை போலீசார் திருச்சி போலீசாரை தொடர்பு கொண்டு இந்த தகவலை கூறியுள்ளனர்.
திருச்சியில் கொண்டையம் பேட்டை, சஞ்சீவி நகர், பால்பண்ணை, செந்தண்ணீர்புரம், டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர், செட்டியப்பட்டி, பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் போலீசார் சாலைகளில் பேரிகார்டு அமைத்து சம்பந்தப்பட்ட காரை வழிமறித்து பிடிக்க தயாராக நின்றனர்.
ஆனால் அந்த வாலிபரும் பேரிகார்டுகள் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றுள்ளார். ஆனால் பின்னாலேயே ரோந்து வாகனத்தில் போலீசார் துரத்தி சென்று உள்ளனர். இதனை கண்ட்ரோல் ரூமில் இருந்து பார்த்த போலீசார் மைக் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் பஞ்சப்பூரில் பேரி கார்டுடன் நின்றிருந்த போலீசார் உஷார் அடைந்து, சாலைக்கு குறுக்கே கார்களையும், இருசக்கர வாகனங்களையும் நிறுத்தி அந்த கார் செல்ல முடியாமல் தடுப்பு ஏற்படுத்தினர். இதனை கவனித்த அந்த வாலிபர் இதற்கு மேல் செல்ல முடியாது என்பதை அறிந்து காரை சாரநாதன் கல்லூரி அருகே திருப்ப முயற்சித்துள்ளார்.
ஆனால் பின்னால் துரத்தி வந்த ஹைவேஸ் பெட்ரோல் 1, எடமலைப்பட்டி புதூர் ரோந்து வாகன போலீசார் காரை திருப்ப முடியாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த முள்ளு காட்டுக்குள் இறங்கி தப்பி ஓடியுள்ளார் அந்த வாலிபர். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அவரை போலீசார் துரத்திச் சென்று அங்கிருந்த மாடு மேய்க்கும் ஆட்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தனர்.
அவரை எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த வாலிபர் சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலீசாருடன் திருச்சி போலீசார் கலந்து பேசி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் அளவிற்கு திருச்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.