முதல்வர் ஸ்டாலின் 30-ம் தேதி திருச்சி வருகை: திமுகவினர் ஆலோசனை
முதல்வர் ஸ்டாலின் வரும் 30-ம் தேதி திருச்சி வருகை தரவுள்ள நிலையில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.;
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 30-ந் தேதி திருச்சிக்கு வருகை தரவுள்ளார். இதையொட்டி திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில், திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் (எம்எல்ஏ), மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, பகுதி செயலாளர்கள் கண்ணன், அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் 30-ம் தேதி திருச்சி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவது குறிதது ஆலோசிக்கப்பட்டது.