திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கமிஷனர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-11-16 15:16 GMT

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

இதன்படி திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெல்ஸ் கிரவுண்ட் பிள்ளையார் கோவில் அருகில் கடந்த மாதம் 21-ந்தேதி பார்த்திபன் (வயது 21) என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி தர்மா (எ) தர்மராஜ், முருகானந்தம், சுனில் ஆகிய மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 50,000-பணத்தை பறித்து சென்று விட்டதாக பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டும், வழக்கின் எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையில் இந்த வழக்கின் குற்றவாளியான தர்மா (எ) தர்மராஜ்  என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனவே, மேற்படி தர்மா (எ) தர்மராஜ் என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் தர்மா (எ) தர்மராஜ் என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி கைது செய்த ஆணை வழங்கப்பட்டது.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News