திருச்சியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது -கமிஷனர் நடவடிக்கை
திருச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முல்லை நகரை சேர்ந்தவர் ராஜி என்பரின் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 35). இவர் கடந்த மாதம் 18-ஆம் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கருமண்டபம் ஆல்பா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 22) என்பவரும் , கருமண்டபம் ஜே. ஆர்.எஸ். நகரைச் சேர்ந்த குமரன் (எ) முத்தமிழ்குமரனும் (வயது 32) சேர்ந்து பால சுப்பிரமணியத்திடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1500-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியம் கண்டோன்மெண்ட் போலீசில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தகுமார் மற்றும் குமரன் என்கிற முத்தமிழ் குமரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.
ஆனந்தகுமார் மீது ஏற்கனவே திருச்சி மாநகரத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தகுமார் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்துடன் செயலபடுபவர் என்பதால் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் கொடுத்த அறிக்கையின் படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆனந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ஆனந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.