திருச்சி ஜே.கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களை சீரமைக்கும் பணி
திருச்சி ஜே.கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 35வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். விரிவாக்க பகுதியான இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக இங்குள்ள அனைத்து தெருக்களிலும் காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கியது .
மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியதால் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. சில தெருக்களில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்ல முடியவில்லை. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் எடுத்துகூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜல்லி கற்கள் கொட்டி தற்காலிகமாக தெருக்களுக்கு செல்லும் பாதைகளை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் தற்போது ஜே.கே.நகரின் அனைத்து தெருக்களிலும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. துரித நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கு ஜே.கே.நகர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.