திருச்சி பூங்காவில் சந்தன மரம் வெட்டி கடத்தலா? : போலீசார் விசாரணை
திருச்சி பூங்காவில் இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தலா? ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருச்சி கோர்ட் அருகில் காந்தி பூங்கா உள்ளது. திருச்சி மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவில் பசுமையை வலியுறுத்தும் வகையில் அதிகளவில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் நிறைய பேர் குடும்பமாக வந்து இந்த பூங்காவில் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து செல்வது வழக்கம். இந்த பூங்காவை ஒட்டி, கோயில் ஒன்றும், அதனருகில் மின்சார வாரிய அலுவலகமும் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த பூங்காவை சுற்றி எப்போதும் பரபரப்பான சூழ்நிலையே காணப்படும்.
இந்நிலையில் இந்த பூங்காவில் உள்ள மரத்தை கடத்துவதற்காக, யாரோ ஒருவர் வெட்டிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் அந்த நபர் வெட்டியது சந்தன மரம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த நொண்டிகுமார் (என்கிற) அழகேசன் (வயது 34) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு அவரை கொண்டு சென்ற போலீசார் அவரிடம், அவர் யார்? யார் சொல்லி இந்த மரம் வெட்டப்பட்டது? யார்? அழைத்து வந்தது. யாரிடம் கொண்டு சென்று மரத்தை கொடுப்பாய்? ஏற்கனவே இது போன்ற கடத்தலில் தொடர்பு உள்ளதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால்... நான் மரம் வெட்டவில்லை என்று ஒரே ஒரு பதிலை கூறி நொண்டி குமார் போலீசாரை திகைக்க செய்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தொடர் நடவடிக்கை குறித்து வனத்துறையினருடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து இந்த பூங்காவில் ஏற்கனவே சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.