ரயில் என்ஜினில் மூதாட்டியின் துண்டான கால்: திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு
ரயில் என்ஜினில் மூதாட்டியின் துண்டான கால் கிடந்த சம்பவம் திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.;
மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையை நேற்று மாலை வந்தடைந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் அந்த ரயில் என்ஜினில் துண்டான மனித கால் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து என்ஜின் டிரைவரிடம் கேட்டபோது அவரும் அதிர்ச்சியில் உறைந்தார். ரயிலை இயக்குவதில் கவனம் முழுமையும் இருந்ததால் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துண்டான அந்த கால் பகுதியை மீட்டனர். துண்டான கால் யாருடையது?, ரயில் என்ஜின் பகுதிக்கு எப்படி வந்தது? என்று ரயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். குறிப்பாக திருச்சியில் இருந்து மணப்பாறை வரை உள்ள அனைத்து ரயில்வே கேட் பகுதியிலும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர், ஆலம்பட்டி பகுதியில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததும், அதில் துண்டான கால் என்ஜின் பகுதியில் விழுந்ததும் தெரியவந்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அந்த மூதாட்டியின் உடலை, உறவினர்கள் எரியூட்டுவதற்காக சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர்.
உடனே, சுடுகாட்டில் இருந்த மூதாட்டியின் உடலை ரயில்வே போலீசார் மீட்டனர். இது குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது, உயிரிழந்த மூதாட்டியின் பெயர் சுப்பம்மாள் முத்து (வயது 62) என்பதும், நேற்று மாலை இனாம்குளத்தூர், ஆலம்பட்டி அருகே உள்ள ரயில்வே கேட்டில் அவர் ஆடு மேய்த்த போது ஒரு ஆடு தண்டவாளத்தில் ஓடியுள்ளது. அதனை காப்பாற்ற முயன்ற சுப்பம்மாள் முத்து ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.
பின்னர் மூதாட்டியின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் என்ஜினில் மூதாட்டியின் துண்டான கால் கிடந்த சம்பவம் திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.