வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
திருச்சி அருகே வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி நகை கொள்ளையடித்தனர்.;
திருச்சி உய்யகொண்டான் திருமலை எம்.எம். நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 33). இவர் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் உய்யகொண்டான் திருமலை உள்ளிட்ட பகுதியில் பாலசுப்பிரமணியனின் வீடு உள்பட பல வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து இருந்தது.
இதனால் அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்று கடந்த 1 வாரமாக தங்கி இருந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் மடிக்கணினி திருட்டு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவ மனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.