திருச்சியில் சீமைகருவேல செடிகளை கையில் வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சீமைகருவேலம் முள் செடிகளை கையில் வைத்துக்கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-07 14:00 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சீமைகருவேலம் முள் செடிகளை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சீமை கருவேலம் முள் செடிகளை கையில் வைத்துக்கொண்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரிகள், குளங்கள், ஊரணிகளில் உள்ள சீமை கருவேலம் முள் செடிகளும், காட்டாமணக்கு செடிகளும், வெங்காய தாமரைகளும் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. எனவே வரும் கோடை காலங்களில் மழைக்கு முன்பாக இதனை அழிக்க வேண்டும் என வலியுறுத்தி விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் நின்றுகொண்டு இருந்தபோது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு காரில் சென்றார். அப்போது விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்றுகொண்டிருப்பதை பார்த்து காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார். அங்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு, விவசாயிகளிடம் என்ன கோரிக்கை என்று கேட்டு கனிவாக பேசினார்.

அப்போது விஸ்வநாதன்,  விவசாயிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தமிழக முழுவதும் உள்ள சீமை கருவை முள் செடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக வந்துள்ளோம் என்று கூறினார்.

அதற்கு அமைச்சர் கே.என்.நேரு தமிழக முதல்வரிடம் கூறி நிச்சயமாக சீமைக்கருவை முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். அப்போது மேயர் அன்பழகன் உடன் இருந்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News