பக்தர்கள் வெள்ளத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்
பக்தர்கள் வெள்ளத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் இன்று மிக சிறப்பாக நடந்தது.;
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் நேரு கலந்து கொண்டார்.
சோழர்களின் தலைநகராம் உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு எழுந்தருளி மக்களை காத்தருளும் தெய்வம் வெக்காளியம்மன். இக்கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் தேரோட்ட விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டிற்கான சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடந்தது.தேரோட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன்நேரு தொடங்கி வைத்தார். இதில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடந்த தேரோட்டம் பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.