திருச்சியில் கட்டுமான தொழிலாளர் மறியல்: பெண்கள் உள்பட 161 பேர் கைது

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 161 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-02 11:51 GMT
திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், கட்டுமான தொழில் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் சட்டங்களைத் திருத்தி நல வாரியங்களை சீரழிக்கக் கூடாது, கட்டுமான தொழிலாளர்கள் பண பயன்கள் பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்,

சேம நலநிதியை கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், இயற்கை மரணத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும், மழைக்கால நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் இன்று திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் பூம்புகார் விற்பனை நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், உலகநாதன், எம்.எஸ்.சேது, வெள்ளைச்சாமி, முருகன், வெங்கடேசன், குணசேகரன், கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை போலீசார் 71 பெண்கள் உட்பட 161 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Tags:    

Similar News