திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தேவமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஞானமுருகன் மகன் மாரியப்பன் (வயது 20). இவர் நேற்று மதியம் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து அரியலூர் பஸ் நிலையம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென மாரியப்பனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். உடனே சுதாரித்துக்கொண்ட மாரியப்பன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் விசாரணையில் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு சரித்திரத்தை சேர்ந்த பழனி மகன் முகேஸ்வரன் என்கிற சிவக்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.