காணாமல் போன சிறுவனை அரை மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட துறையூர் போலீசார்
பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை உடனடியாக செயல்பட்டு அரை மணி நேரத்தில் துறையூர் போலீசார் பத்திரமாக மீட்டனர்.;
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுக்கா , வரகூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (33) இவரது மனைவி பிரேமா (21). இவர்கள் தனது ஒரே மகனாக வெற்றிவேல் (3) மற்றும் உறவினர்கள் 7 பேர் வரகூரிலிருந்து காலை 6 மணிக்கு துறையூர் வந்து அங்கிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று முடி காணிக்கை செலுத்தி விட்டு, மீண்டும் வரகூர் செல்வதற்காக இன்று மாலை 5 மணிக்கு துறையூர் பேருந்து நிலையம் வந்தனர்.
வரகூர் செல்லும் பேருந்து வந்தவுடன், கூட்டம் அதிகமாக இருந்ததால், முன்புறம் பாதி பேரும்,பின் படிக்கட்டின் மூலம் பாதி பேரும் பேருந்தில் ஏறும் போது கவனக்குறைவாக சிறுவன் வெற்றி வேலை தவறவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பேருந்து வரகூர் சென்றவுடன் அனைவரும் சிறுவனை தேடிப் பார்த்துள்ளனர். சிறுவனைக் காணாமல் தவித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் , துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக பேருந்து நிலையத்திற்கு சென்ற போலீசார் தீவிரமாக தேடியதில் திருச்சி செல்லும் பேருந்து வழித்தடத்தின் முன்பாக அழுது கொண்டிருந்த சிறுவனைப் பற்றி அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அந்தச் சிறுவன், பேருந்து நிலையத்தில் சிறுவன் அரை மணி நேரமாக அழுதபடி நின்றிருந்ததாகவும் , இது பற்றி போலீசாருக்கு தகவல் சென்றுள்ளதாகவும் கூறினர் .
பின்பு துறையூர் குழந்தைகள் பாதுகாப்பு இயக்க பெண் போலீசார் மகாலட்சுமி, நீலாவதி ஆகியோர்சிறுவனைப் பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் உத்தரவின் பேரில், பெரியசாமியிடம் சிறுவன் வெற்றிவேலை, சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ஒப்படைத்தனர்.
அழுதபடியே நின்றிருந்த தந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில், சிறுவன் வெற்றிவேல்ஓடிச் சென்று கட்டிக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காணாமல் போன சிறுவனை அரைமணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இயக்க பெண் போலீசார் மகாலட்சுமி , நீலாவதி ஆகியோரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். மேலும் சமூக வலைதளங்களிலும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.