திருவெறும்பூர் நேதாஜி நகரில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்
திருவெறும்பூர் நேதாஜி நகரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் நேதாஜி நகர் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்தப் பகுதிக்கு அடிப்படைத் தேவைகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் சரிவர இல்லை என்றும் மேலும் இந்த பகுதியில் உள்ள பொது கழிப்பிட பராமரிப்பு இல்லாமல் பால்வாடி நிலையத்திற்கு அருகே உள்ளதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதோடு பால்வாடி கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும், அதை உடனடியாக இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டுமென திருச்சி கலெக்டரிடம் நேரிடையாக மனு கொடுத்தும் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில் தற்போது சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அதனால் நேதாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சாலையில் நடந்த நாற்று நடும் போராட்டத்திற்கு சங்கத்தலைவர் குத்புதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் திருவேங்கடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாண்டியன், திருச்சி மாநகர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி லெனின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.