திருவெறும்பூர் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது

திருவெறும்பூர் பகுதிகளில் பல்வேறு திருட்டு கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு நகை, டிவி உள்ளிட்ட பொருட்கள் மீட்பு

Update: 2021-10-09 16:00 GMT

திருச்சி திருவெறும்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் டிவி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் ராஜாமுகமது (வயது 26). அண்ணாநகர் கொடிமரத்தெருவில் வசிக்கும் ஜோன்ஸ் (வயது 27). இவர்கள் இருவரையும் துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தனிப்படை அமைத்து வேறு ஒரு குற்ற சம்பவத்திற்காக பிடித்து விசாரணை செய்தார். 

அப்போது இவர்கள் இருவரும் நவல்பட்டு காவல் நிலைய பகுதியில் கடந்த மே மாதம் இலந்தைப் பட்டி அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரில்  திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ராஜாமணி (வயது 42) என்பவரிடம் வீட்டில் தூங்கும் பொழுது கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இவர்களிடமிருந்து 10 பவுன் தாலிச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

அடுத்து காட்டூர் ரயில் நகர் பகுதியை சேர்ந்த மன்சூர் (வயது 28), காட்டூர் அண்ணாநகர் மாவுமில் தெரு பகுதியை சேர்ந்த உசேன் அல் கலிபுல்லா (வயது 23) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், இருவரும் தேவராயநேரி போசாங்கு வீட்டில் கடந்த ஜனவரி மாதம் வீட்டின் பூட்டை உடைத்து 3,3/4 பவுன் நகையும், அடுத்து துவாக்குடி ராவுத்தன் மேடு ஆதிபராசக்தி கோயில் உண்டியலை உடைத்து ரூ.3 ஆயிரம் ரொக்கம், அங்கு அம்மன் கழுத்தில் இருந்த தாலி கொடி காசு உள்பட 4 கிராம் நகை மற்றும்  எல்.இ.டி. டிவியும் திருடியதையும், அடுத்து மணிகண்டம் காவல் நிலைய பகுதிகளில் மூன்று வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 5,1/2 பவுன் நகை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். இவர்களிடம் இருந்து போலீசார் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளையும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அடுத்து காட்டூர் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் கோபால் என்ற குஞ்சு கோபால் (வயது 26), பாஸ்கர் (வயது 24), இவர்கள் இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், இவர்கள் கடந்த மாதம் திருவெறும்பூர் காட்டூர் கைலாஷ் நகர் பகுதிகளில் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் 3,3/4  பவுன் தங்க நகைகளும் எல்இடி டிவி இரண்டு மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் நகைகள் மற்றும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 6 பேரையும் திருச்சி ஜெ.எம் 6-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், நாகராஜ், வேலழகன் ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைத்து செயல்பட்ட போலீசாரை திருச்சி எஸ்.பி. மூர்த்தி, திருவெறும்பூர்  டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News