திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன கல்லூரி பஸ் திருச்சியில் மீட்பு

திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன கல்லூரி பஸ்சை திருச்சி திருப்பராய்த்துறை பகுதியில் போலீசார் மீட்டனர்.

Update: 2021-09-28 13:15 GMT

திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன பஸ் திருச்சியில் மீட்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோயில் பகுதியில் சர் ஐசக் நியூட்டன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை கல்லூரி பேருந்தை எடுக்க சென்ற பஸ் டிரைவர், பஸ் அங்கு  இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பஸ்  திருட்டு போயிருப்பதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பஸ்சை தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன கல்லூரி பஸ் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நின்றதை அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் சென்று பாரத்தனர்.

மேலும் போலீசாருக்கு வாட்ஸ் ஆப் மூலம் நன்னிலம் பகுதியில் திருட்டு போனது பற்றி தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சுங்க சாவடியில் நின்ற பஸ் கல்லூரியின் பஸ் தான்  என்பதை உறுதி செய்து ஜீயபுரம் போலீசார் நன்னிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற நன்னிலம் போலீசார் கல்லூரி பஸ்சை மீட்டு நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News