திருச்சி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு
திருச்சி அருகே வட தீர்த்தநாத சுவாமி கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை மற்றும் உண்டியல் திருடப்பட்டது.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ளது வடதீர்த்த நாத சுவாமி கோவில் . இந்த கோவில் சுமார் 1750 வருட பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் நேற்று மாலை நேர பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.நேற்று காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக பணியாளர் வந்து கோவிலின் மெயின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ,கோவில் வளாகத்தில் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை உடைத்துவிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அம்மன் கருவறை கதவின் பூட்டைஉடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலியையும்,கோவில் வளாகத்தில் வைத்திருந்த உண்டியலை உடைத்து எடுத்துசென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கோவில் அதிகாரிகளுக்கும் ஜீயபுரம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்தபோலீசார் விசாரனை செய்தனர். பின்னர்போலீஸ் மோப்பநாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டு,சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடிசென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றின் படித்துறை வரை சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் கொள்ளைபோன கோவிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலாவாணிஆய்வு செய்தார்.இந்த சம்பவம் குறித்து கோவில். செயல் அலுவலர் ராகினி ஜீயபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியலை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.