திருச்சி: ஸ்கூட்டி திருடியவரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஸ்கூட்டி திருடியவரை சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்தனர்.

Update: 2021-09-21 13:07 GMT
தொட்டியம் அருகே மீட்கப்பட்ட ஸ்கூட்டி

திருச்சி மாவட்டம் முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிபவர் போலீஸ்காரர் சுரேஷ். இன்று  வேலை முடிந்து தனது சொந்த ஊரான தொட்டியத்தை நோக்கி தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது முசிறி பெரியார் பாலம் அருகே உள்ள வேகத்தடையில் வரும் போது பின்னால் ஸ்கூட்டியில் வந்த ஒரு வாலிபர் அதிவேகமாக சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் சுரேஷ் உடனே அவரை விரட்டி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் எங்கும் நிற்காமல் சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த  சுரேஷ் அந்த வாலிபரை விடாமல் சினிமா பாணியில் விரட்டி சென்று தொட்டியம் காவல் நிலையத்தைத் தாண்டி காட்டுப்புத்தூர் பிரிவு ரோடு அருகே சென்றார். அப்போது அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்து நின்றது.

அந்த நேரத்தில் சுரேஷ் ஸ்கூட்டடியில் அதிவேகமாக வந்த வாலிபரை பிடித்து வைத்து விசாரணை நடத்தினார். அப்போது தொட்டியம் காவல் நிலையத்தில் இருந்து சக காவலர்களான லோகநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோரை வரவழைத்து பிடிபட்ட வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில் ஸ்கூட்டியில் வந்த வாலிபர் தர்மபுரியை சேர்ந்த நவீன்குமார் என்பதும் முசிறி பார்வதிபுரம் பகுதியில் ஏசி ரிப்பேர் செய்ய வந்த மெக்கானிக் ஸ்கூட்டியை திருடிக்கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

உடனே வாலிபர் நவீன்குமாரை தொட்டியம் அரசு மருத்துவமனையில் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டு முசிறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்தனர். சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்று இரு சக்கர வாகனத்தை பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News