இரு தரப்பினரிடையே மோதல், 31 பேர் கைது

மணப்பாறை அருகே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் லாரி, கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-21 09:00 GMT

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே முத்தப்புடையான் பட்டியை சேர்ந்த சவரிமுத்து மகன் ஆரோக்கியசாமி (36), திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக உள்ள இவர், குளித்தலை ரோடு பிரிவு அருகிலுள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஜல்லி, (எம்.சாண்ட்) மணல் விற்பனை செய்துவருகிறார். இதற்காக லாரி, ஜேசிபி, வேன் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றார்.

இந்த வாகனங்கள் போக்குவரத்து மற்றும் ஜல்லி, மணல்களிலிருந்து வெளியேறும் மண், தூசி ஆகியவைகளால் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.

இதனிடையே அதே பகுதியில் (ஆபிசர்ஸ் டவுனில்) வசிக்கும் குணசீலி (56), அவரது மகன் ஞானராஜ் (32) மற்றும் சிலர் ஆரோக்கியசாமியிடம் முறையிட்டனர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கரூரில் வேலை பார்க்கும் தனது அண்ணன் வினோத் (எ) கிறிஸ்டோபரிடம், ஞானராஜ் நடந்ததை கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை கரூரிலிருந்து 20 க்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்து வந்த வினோத், ஆரோக்கியசாமியின் 3 லாரி, 2 ஜேசிபி, வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து சூறையாடியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஆரோக்கியசாமி அவரது ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர், பதிலுக்கு கரூரை சேர்ந்தவர்களின் 3 கார்களை தாக்கியதாக கூறபட்டது.

இச்சம்பவமறிந்து வந்த மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா மற்றும் போலீஸார், இருதரப்பு மோதலையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மோதல் சமந்தமாக ஆபிசர்ஸ் டவுனை சேர்ந்த வக்கீல் ஞானராஜ், அவரது அண்ணன் வினோத் (எ) கிறிஸ்டோபர், இவர்களது தாயார் குணசீலி மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் என மொத்தம் 28 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

மேலும் மற்றொரு தரப்பில் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி, முத்தபுடையான்பட்டி சரவணன் (19), கே.பெரியபட்டியை சேர்ந்த வேலாயுதம் மகன் பழனிசாமி (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News