பக்தர்கள் வெள்ளத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் தேரோட்டம்
பக்தர்கள் வெள்ளத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் தேரோட்டம் நடைபெற்றது.;
தமிழகத்திலுள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலானது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா பரவல், அச்சுறுத்தல் ,ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சமயபுரம் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கடந்த 10ஆம் தேதி சித்திரை பெருந்திருவிழா வுக்கு கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் காலை மற்றும் இரவு நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை தூக்கி வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளியதும் 11:30 மணி அளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் வந்தனர். பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் கரகம் தூக்கியும் வந்தனர். ஆங்காங்கே அம்மன் வேடமிட்ட பக்தர்கள் மேள தாளத்திற்கு ஏற்றபடி ஆடினார்கள்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேர் வலம் வரும் வீதியில் திரண்டு நின்றனர். தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நகரின் பல பகுதிகளிலும் இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பில் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.பக்தர்கள் சிரமமின்றி தரிசிப்பதற்காக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் தலைமையில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.