திருச்சி அருகே ரேஷன் பொருட்கள் முறையாக வழங்ககோரி முற்றுகை போராட்டம்

திருச்சி அருகே ரேஷன் பொருட்கள் முறையாக வழங்ககோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-18 10:28 GMT

மண்ணச்சநல்லூர் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்தது மூவராயன்பாளையம் மேலூர். இந்த ஊரில் உள்ள ரேஷன் கடையின் மூலம் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு ஒவ்வொரு மாதமும் வழங்கக்கூடிய அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தரமான அரிசியை பதுக்கி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 11-ந் தேதி கொடுக்கப்படும் என்று டோக்கன் வழங்கிவிட்டு, இதுவரை கொடுக்காததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த கடைக்கு நிரந்தரமாக விற்பனையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும், கூட்டுறவு பதிவாளர் ஜெயராமன், துணை பதிவாளர் பத்மகுமார், திருப்பைஞ்சீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோரும் அங்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News