விவசாயகூலி தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
விவசாய கூலி தொழிலாளி கொலை வழக்கில் இரண்டு பேர் கைதை தொடர்ந்து மேலும் ஒருவர் 3-வதாக கைது செய்யப்பட்டார்.;
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோவத்தகுடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 54) விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் பாச்சூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்த் என்கிற சப்பானி (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இருவருக்கும் பாச்சூரில் உள்ள ஒரு கடையின் முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தை, பன்னீர்செல்வம் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.
இதை ஆனந்தின் நண்பர் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (32) தடுக்க முயன்றபோது அவரது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், ரவிச்சந்திரன் காயம் அடைந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது நண்பரான கோபுரப்பட்டியை சேர்ந்த மனோகர் (27) என்பவருடன் சேர்ந்து பன்னீர்செல்வத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், மனோகர் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரனை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.