noodles eaten child deceased-ஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு? : திருச்சியில் பரபரப்பு..!

noodles eaten child deceased-நூடுல்ஸ் சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததாக திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-20 13:29 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடியைச் சேர்ந்த சேகர். அவரது மனைவி மகாலட்சுமி. சேகர் ஒரு ஜேசிபி ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.

இவர்களுக்கு சுஜிதா (6), சாய் தருண் (2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 17ம் தேதி இரவு மகாலட்சுமி நூடுல்ஸ் சமைத்து எல்லோரும் சாப்பிட்டுள்ளனர். நூடுல்ஸ் மிச்சம் இருந்ததால் மீதமிருந்த நூடுல்ஸ்-ஐ  பக்கத்து வீட்டில் கொடுத்து ஃபிரிட்ஜில் வைத்திருக்கச் சொல்லியிருக்கிறார்.

அடுத்தநாள் காலை மகாலட்சுமி ஃப்ரிட்ஜில் வைத்திருந்த அந்த நூடுல்ஸை எடுத்துவந்து சூடு படுத்தாமல் அப்படியே குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்திருக்கிறார். நூடுல்ஸைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குழந்தை சாய் தருணுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதில் குழந்தை சோர்ந்து சுருண்டு விழுந்து மயங்கிப்போனான். உடனே, பதறிப்போன மகாலட்சுமி குழந்தை சாய் தருணைத் தூக்கிக்கொண்டு நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு 'குழந்தையின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்படி கூறியிருக்கின்றனர்.

அதையடுத்து மகாலட்சுமி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு குழந்தை சாய் தருணைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். அதையடுத்து நூடுல்ஸ் சாப்பிட்டதால் 2 வயது குழந்தை உயிரிழப்பு என்ற தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

'குழந்தையின்மீது பெற்றோர் இருவரும் பாசமாக இருந்ததாகவே அக்கம் பக்கத்தினர் கூறியிருக்கிறார்கள். எனவே, குழந்தை இறப்பில் பெற்றோர் மீது எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவரும்' என்று கொள்ளிடம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News