திருவிடைமருதூர் அருகே புதைத்து வைக்கப்பட்ட எரிச்சாரயம் பறிமுதல் ஒருவர் கைது

திருவிடைமருதூர் அருகே வாழைத் தோப்பில் புதைத்து வைக்கப்பட்ட எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

Update: 2021-05-22 12:15 GMT

கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம நபர்கள் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கொண்டுவரப்பட்டு கும்பகோணத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 19-ம் தேதி திருநாகேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 32 கேன்களில் 2650 லிட்டர் எரிசாராயமும் ரூ 10 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூர் அருகே உள்ள சோழியவிளாகம் மரத்துறை காமராஜபுரம் காலனியில் உள்ள காலிங்கராஜன் என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பந்தநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காலிங்கராஜன் வீட்டை சோதனை செய்தனர். ஆனால் வீட்டிற்குள் சாராய கேன்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

பின்னர் அவரது வீட்டின் அருகே இளங்கோ என்பவருக்கு சொந்தமான வாழைத் தோப்பில் சோதனையிட்டனர். அப்போது பூமிக்கடியில் சாராய கேன்கள் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் மண்ணைத் தோண்டி பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 21 புதுச்சேரி மாநில எரிசாராய கேன்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமறைவான காலிங்கராஜனை பந்தநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News