ஊராட்சி மன்றத் தலைவர் வீடு அருகே மர்ம பொருளை கடித்த நாய் முகம் சிதறி உயிரிழப்பு
பந்தநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வீடு அருகே மர்ம பொருளை கடித்த நாய் முகம் சிதறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அடுத்த கோவில்ராமபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் மகேஸ்வரி. இவரது கணவர் அருள் திமுகவில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் இவரது வீட்டின் அருகே பயங்கரமான வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அருள், மகேஸ்வரி மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது அங்கு நாய் முகம் சிதறி ரத்தக் காயங்களோடு இறந்து கிடந்தது.
இதையடுத்து அருள் பந்தநல்லூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த திருவிடைமருதூர் போலீஸ் டிஎஸ்பி வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மேலும், தஞ்சாவூரிலிருந்து வெடிகுண்டு நிபுணர்களும், கால்நடை மருத்துவர் புகழேந்தி தலைமையில் மருத்துவர்களும் உயிரிழந்த நாயை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் சுடுகாடு அருகே புதைத்தனர்.
இதுகுறித்து அருள் கூறுகையில், எங்களது வீட்டின் முன்பாக பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது நாய் முகம் சிதறி, வாயிலிருந்து ரத்தம் வழிந்து இறந்து கிடந்தது. நாய் ஏதோ வெடி பொருள் போன்ற பொருளை கடித்திருக்க வேண்டும். இதனால் நாய் முகம் சிதறி இறந்துள்ளது. எனது குடும்பத்தினர் மீது பழிவாங்க வேண்டும் என யாரோ இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எனவே எனது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இது குறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார்.