தூய்மை பணியாளர்கள் நலனில் அக்கறை காட்டும் செயல் அலுவலர்
திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் துாய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆவி பிடிப்பதற்காக, மின்சாரத்தில் இயங்கும் நீராவி பிடிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம் பேரூராட்சியில், 30 துாய்மை பணியாளர்கள், 10 அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் நீராவி பிடித்தால், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என, டாக்டர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், துாய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நலன் கருதி, செயல் அலுவலர் சிவலிங்கம், தன் சொந்த செலவில், தலா 500 ரூபாய் மதிப்புள்ள மூன்று நீராவி பிடிக்கும் கருவிகளை வாங்கி அலுவலகத்தில் வைத்துள்ளார்.
தூய்மை பணியாளர்களும், அலுவலக பணியாளர்களும், வேலைக்கு வரும் பொழுதும், வேலை முடித்து வீட்டுக்குச் செல்லும் பொழுதும், கட்டாயம் நீராவி பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அலுவலகப் பணியாளர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிவலிங்கம் கூறுகையில் நீராடி பிடிக்கும் கருவியை வாங்கி வீட்டில் பயன்படுத்தினேன். அது மிகவும்பயன் உள்ளதாக இருப்பதை உணர்ந்தேன்.அலுவலகத்திலும் பயன்படுத்த திட்டமிட்டு வாங்கி வைத்துள்ளேன். அரை லிட்டர் தண்ணீர் நிரப்பும் வகையில், மின்சாரத்தில் இயங்குகிறது. தண்ணீரில் பச்சை கற்பூரமும் அல்லது வெறும் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீரில் இருந்து வெளியாகும் ஆவியால் பணியாளர்களுக்கு ஏற்பட கூடிய சளி, இருமல் தொல்லைகள் குறைந்துள்ளது என்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.