தஞ்சாவூரில் ரூ 20.5 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம் : கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
தஞ்சாவூரில் ரூ 20.5 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12 தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
தண்ணீர் திறப்பதற்குள் கடைமடை பகுதி வரை செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டத்தில் தூர்வார கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை அருகே கூடலூர் வெண்ணாற்றில் பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணியை தூர் வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின் பேட்டியளித்த அவர், தஞ்சை மாவட்டத்தில் 20.5 கோடி ரூபாயில் 1,169 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. பணிகள் தொடங்கி 2 நாட்கள் ஆகிறது.
ஜூன் 15-ம் தேதிக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.