12 குடிசை வீடுகள் எரிந்து சேதம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
திருவையாறு அருகே தீவிபத்து 12 குடிசை வீடுகள் எரிந்து ரூ. 6 லட்சம் சேதம்: பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல்
திருவையாறு அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கல்
திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி புதுத்தெருவை சேர்ந்த கூத்தையன் மகன் தர்மராஜ்(54) என்பவர் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூக்கட்டும் நார் கட்டுகளில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்தது. தீ வேகமாக பக்கத்தில் உள்ள கர்ணன்(50) வீட்டுக்கும் பரவியதில், அங்கிருந்த சமையல் சிலிண்டர் வெடித்தது. இதைத்தொடந்து அருகிலிருந்த அஞ்சலை(60), ராஜேஸ்வரி(50), முருகேசன்(54), பூபதி(50), சைவராஜ்(65), கல்யாணி(55), முருகேசன்(28), மலர்கொடி(54), கீழத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த தனலெட்சுமி(40), சாந்தி(48) ஆகிய 12 பேர் வீடுகளும் எரிந்து சேதமடைந்தது.
தீப்பிடித்து எரிந்துபோன 12 வீடுகளிலும் வீட்டு உபயோகப் பொருள்கள் பணம், நகை உள்பட சுமார் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய தீயணைப்புதுறை வாகனங்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் பூபதி(50) என்பவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன், ஒன்றியச் செயலாளர் கௌதமன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், நகரச்செயலாளர் அகமதுமைதீன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கம், வேஷ்டி, புடவை, அரிசி, மண்ணெண்ணை ஆகிய அத்தியாவசியப்பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினர். தீ விபத்து குறித்து நடுக்காவேரி காவல்நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.